<$BlogRSDUrl$>

Thursday, October 02, 2003

தேடலில்லா கவிதை போல்..

காலந்தவறி அசைந்தாடி வரும்
ஓசி1 பஸ்சும்
சளைக்காது
மூசிவீசும் குளிர்க்காற்றும்
நெஞ்சினிலுள் இறங்கும்
கோபக் கவளங்களாய்

வெறுப்பும் சலிப்பும்
குழைத்தெறியும்பொழுதில்
என்றேனும் ஒருகால்
உருகாதோ உறைபனி

மதுவருந்தி
மயங்கும் வெள்ளியிரவுகளில்
பலவீனங்களுடன்
மனிதர்களை நேசிக்க
நெஞ்சு கிஞ்சிக்கும்

பாடப் புத்தகங்களின்
பக்கங்களைப் புரட்டவே அலுப்புறும்
நான்
மாந்தர்களைப் படித்தல்
நடவாதென
நினைவு ததும்பிச் சிரிக்கும்

சுரங்கப் பாதையில்
வகுப்புகளுக்காய்
நடக்கையில்
தென்படும் பெண்களெல்லாம்
தேவதைகளாக மிதக்கின்றனர்

அறிவும் தெளிவும்
தெறித்துச் சிதற
அவர்கள் பேசுகையிலும்
ஆண்களுண்டாக்கும்
காயங்களே
பேச்சிடைப் பொருளாகின்றன

முற்போக்குகளின்
பிரதிநிதியாய்
சமரசங்களற்று
அலையும் இளைஞன்,
பட்டத்துடன்
முகவரியற்றுப் போவது
நாளைய விந்தை

அவ்வவ்போது கற்றல்
வன்முறையாய்
சிந்தனையடுக்குகளை
சிதைத்துப்போக
நெருங்குகிறது பரீட்சை

தேடலில்லா
கவிதை போல்
காலத்தை
அசட்டை செய்து
நகர்கிறது வாழ்வு.

இளங்கோ
2001.02.17
நன்றி: முழக்கம் & பதிவுகள்

OC Transpo - Ottawa-Carleton Transportation

Sunday, September 28, 2003

உதிரும் சிறகு

சடசடத்தோடும்
இரயில்களின் இடைவெளியில்
பூக்களின் தோழமையுடன்
நிகழ்கிறது
நமது முதல் சந்திப்பு

பேசுவதற்கான வார்த்தைகள்
திசைகளைத் துழாவும்
விழிகளில் புதைய
நமக்கான வெளிகளில் மட்டும்
நிரம்புகிறது நிசப்தம்

இணையத்தின்
இருப்பை வியந்தபடி
நேசத்தின் முதல்தளிர்
தண்டவாளத்தருகில் துளிர்க்கிறது
காலத்தின் அடுக்குகளைப் பிளந்தபடி

மழைக்கால இரவில்
ஒளியின் அரூப நடனத்துடன்
பயங்களற்று பயணிக்கின்றோம்
திசைகள் தெரியாப்
புராதனத்தெருக்களில்

புலம்பெயர்கையில்
ஓலமிட்டுப் பிளிறிய
ஆன்மாவில் அழுகுரல்
இனியேனும் சற்று அதிராதிருத்தல்கூடும்
உனையிறுகவணைக்கும்
இந்தக்கணத்திலேனும்

தாய்மொழியின் சுவையறியாது
சபிக்கப்பட்ட வாழ்வின் மீதியை
துயரங்கள் சிதைக்க
விழித்தெழும் நீண்ட இரவுகளை
தனிமைத்திரை கவிழ
விரியும் வெற்றுப் பகல்களை

பகிர்வதற்கான நம்பிக்கைகள்
உதடுகள் நனைய
கிறங்கிப்போகும் உன்விழிகளில்
மின்னலாய் வெட்டுகிறது

நீளும்
இத்தொலைதூரப் பேரூந்துப்பயணத்தில்
உனது விழிநீரும் வியர்வையும் கலக்க
பிரிவுத்துயர் தாங்கிய ஆடையினிருந்து
இதமாய் விரிகிறது
நமக்கான முதற்கவிதை.

இளங்கோ
2002.03.01
நன்றி: திண்ணை
This poem is dedicated to my soul mate, Abira.
அழிவின் தீரா நடனங்கள்

1.
உலகெங்கிலும்
போரிலிறக்கும் சிறார்களை நினைவுகூர்ந்து
கருத்துக்கள் பரிமாற
வாருங்கள் தோழர்களேயென
வளாகத்துச்சுவர்கள்
அழைப்பு விடுத்தன

தீவிரவாதிகளென முகத்திலறைந்து
புதியநாமம் சூட்டப்பட்ட அவர்களும்
வன்முறை முகமூடியிடப்பட்ட என்னைப்போன்றவர்களும்
உலகமயமாதலிற்கெதிராய் உரத்துக்குரல்கொடுத்த
தோழர்கள் சிலருமாய்..

நிறங்களை
கலாச்சாரக்கூறுகளை
மீறியவோர் புள்ளியில்
மனந்திறந்துபேசக்கூடினோம்

கருத்துக்கள்
காந்தப்புலமாகி
திசைகளெட்டுமலைந்து
தீவிரமாதமெனும் புள்ளியில் நிலைத்தது

வந்திருந்த வெள்ளைத்தோழர்கள்
இனத்துவேசம் பொங்கிப்பிராவாகரிக்கும்
நாஸனல்போஸ்ட்டுக்களில் எழுதிக்குவிக்கும்..
அறிவுஜீவிகளின் வழித்தோன்றல்களல்ல

அமெரிக்காவிற்கு
இன்னும் வேண்டுமென
ஆத்திரத்தின் உச்சியின் நின்ற
பாலஸ்தீனிய தோழனைக்கண்டு
கோபம்மிகுந்து வெளிநடப்புச்செய்தாரில்லை

வலிகளைப் புரிந்துகொள்கிறோம்
ஆனாலும்
அநியாயமாய் இறந்தவுயிர்களுக்கு
மதிப்பளித்தலும்
சாலவும் சிறந்ததென்றனர்

அழிவுகளிலிருந்து
எதை நோக்கிய தேடலுள்ளதென
வினாவிய தோழியிற்கு
அரங்கம் நிரம்பிய நிசப்தமே
விடையாக வழிந்தது

எதுவுமே செய்ய இயலாதவர்களாயிருப்பினும்
கேள்விகள் எழுப்பி
பொதுவான தளத்தில்
கருத்துக்கள் பரிமாறுபவர்களாய்
இருப்பதுகுறித்த களிப்புடன்
பிரிந்தோம் நாம்


2.
இன்றையபொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாம் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்

ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிகஎளிய சமன்பாடுகள்
ஒவ்வெரரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை.


இளங்கோ
2001.09.22
நன்றி: திண்ணை

நாஸனல் போஸ்ட் - கனடீய நாளிதழ்

Sunday, September 21, 2003

அதிகாலையும் அந்திக்கருக்கலும்

என் சுயத்தை விழுங்கி
ஏப்பமிடப்போகும்
பரிட்சையொன்றின் அதிர்வுடனோ
அல்லது
நள்ளிரவில் வகையின்றியருந்திய
மதுவின் எஞ்சிய கசப்புடனோ
காலைப்பயணம் விரிவுகொள்ளும்

வானிலிருந்து கீழிறங்கும்பனியும்
துளிகளின் மென்மையுடன்
புற்களுடன் புணர்வதில்லை
திட்டுத் திட்டாகவே
தரையினில் மிதக்கின்றன
புலம்பெயர்ந்த அகதியின்
இறுகிய இதயத்தைப்பிரதியெடுத்தாற் போல

இரவில் உதிரும்
நட்சத்திரங்களிடையே
மழலையாகி மாறி
பால்வீதியில் சுழன்றாடும்
ஓளியாண்டுவாழ்வு குறித்தஇலயிப்பில்
விரிவுரைகள் தினம் விரைவுபெறும்

மதியவுணவுடன்
நதியின் மொழியுடன்
தொடர்புகொள்ளும்
மௌன சமிக்ஞைகளை
ஒவ்வொருமுறையும்
எவரோ வந்து
கலைத்தபடியிருக்கின்றனர்

வசந்தகாலங்களில்
தோழியொருத்தியின்
கைகளைக்கோர்த்தபடி
நதியோரமாய் நடக்கும்
நிர்மலமான ஆசைகள்
இலைகள் உதிரும்வரை நிறைவேறியதில்லை

உறைந்துபோன நதியின் மறைவிடங்களில்
இருளப்பிய காரின் கண்ணாடிகளுக்குள்
என்னையும் அவளையும்
அறியும் முயற்சிகள்
உணர்வுகள் அரிதாரமின்றியுருகும்
குளிர்காலத்துப்பொழுதுகளில் மட்டுமே
நிகழ்கின்றன

எப்போதாவது
மையங்கொள்ளும் ஒன்றுகூடல்களில்
அனைத்தும்மீறி
நவீனத்துவப்பெண்ணே
வார்த்தைகளால் துகிலுரியப்படுவாள்
ஆண்களின் கனத்துப்போன குரல்களின்பெருக்கத்தால்

மூர்க்கமாய்
குதறிக்கிழிக்கும் நாய்களிடையே
இணையவிரும்பும்
என் நூற்றாண்டுகால தொன்மத்;தை
நேற்றுக்கிறங்கிய விழிகளிலிருந்து
விரியும் நெருப்புப்பார்வைகள்
உண்மையின் ஆழத்தினுள்
புதைத்துக் கொல்லும்

தாங்கள்
வந்ததற்கான அடையாளங்களாய்
இருக்கைகளில்
நிரப்பமுடியாத மௌனத்தை
வீசிச்செல்கின்றனர்
நவீன பாஞ்சாலிகள்

அதில்
நாளையமரும் தங்கள் குழந்தைகள்
கிளர்ந்தெழுவதற்கான
சின்னஉரசல்களை
அந்த சப்தமின்மைகள் உருவாக்கலாம்
என்கின்றதான கனவின்மீதியை
மட்டும் காவியபடி
கலைகின்றனர்
ஒவ்வொருபொழுதுகளிலும்.

இளங்கோ
2001.11.19 அதிகாலை 2.21
நன்றி: மூன்றாவது மனிதன்


Saturday, September 20, 2003

அமைதியின் மணம்

ஒவ்வொரு
பெருந்துயர்களின் பின்னும்
நீளும் நம்பிக்கையின் துளிர்ப்பிலே
வாழ்வு பெருகும்
எமக்கு

நேற்றுப்பரவிய வெறுமை
துடைத்தெறித்து,
நாளையை மீண்டும் சுகிக்க
எங்கிருந்தோ
எழும் மிடுக்கு

அவ்வாறான மகிழ்வின்சாயல்
கலந்துருகியகணத்தில்
புத்தரையும் காந்தியையும்
குழைத்துப்பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்திpல் பரவினர்
எந்தக்கேள்விகளுமில்லாது

சிரித்தபடிவந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக்கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும்
காரணமெனலாம்

பிறகு
எண்ணெய் மணமும்
அணிவகுப்புத்தடமும்
கலந்து பெருக
பீதியில் உறைந்தன
தெருக்கள்

பொழுதெல்லாம் விழிமூடாது
ஊர்களின் அமைதிக்காய்
ஒற்றைக்கால் தவமியற்றியவர்கள்
அதிகாலையில் மட்டும்
துயின்றுபோகும் அதிசயம்
உருக்குலைந்த உடல்கள்
பனிப்புகாரில் மிதக்கையில் மட்டுமே
நிகழ்ந்தன

சாரமும்
கைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்
விழிகள் வெறித்தபடியிருக்கும்; கோரமும்
அரணுக்குள்ளிருப்பவர்கள்
அழிவுகளில்லாது திரும்பிச்செல்லல் கூடாதென
நெஞ்சு விம்மித்தணியும்

எதிர்வீட்டு அக்காவின்
ஆடைக்குள் குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள் முலைகள்திருகி
கூட்டாய்ப்படர்கையில்
அசையாய்ச்சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்

நிகழ்வுகளின் தொடர்ச்சியில்
ஆழ்மனதின் துலங்கல்கள் சிதைவுற
மழலையாகிச் சிரித்தபடி
காணாமற்போனாள் அக்கா
ஓர்நாள்

.. . .. ... .. .. .. ..

இப்போது புலம்பெயர்வாழ்வு.

நினைவுகளின் செட்டையைக்கழட்டிவிட்டு
துருவக்கரடியின் தோலான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக்காலம்

நேற்று நடந்தவையெதுவும்
என்னைப்பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத்தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத்தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு

எனினும்..

அவள் முலைகள் சுவைத்து
முயங்கும்பொழுதெல்லாம்
எண்ணெய் பிசுபிசுக்கும்
அமைதியின் மணமும்
குறியென விறைத்துநிற்கும்
துப்பாக்கிமுனையின் நினைவும்

ஏனோ பீறிட்டெழுகிறது
எல்லாவற்றையும் புறக்கணித்து.


இளங்கோ
2001.11.02 அதிகாலை 4.04
நன்றி: உயிர்நிழல்

இயல்பினை இழக்கையில்...

தொலைதூரத்துப் பயணங்கள்
எப்போதும்
மனதிற்கு
கிளர்ச்சியைத் தருபவை

நேரே காணவிருக்கும்
மனிதர்களின்
அன்பின் நினைவுகளுக்கு
பெருந்தெருக்களைத் தாண்டி
விரியும்
நதிகளும் பெருங்காடுகளும்
சுவை சேர்க்கும்

'இரட்சிக்கும்' அமெரிக்காவும்
இந்தியச் சினிமாவும்
இல்லாமல் எந்தப் பயணமும்
நிறைவேறியதாய்
நினைவினில்லை

அயல்வீட்டுக்காரி
வேற்றினக்காரனோடு ஓடிய விந்தை
பையன்களோடு
பிருஷ்டம் உரசியபடி
திரியும் தமிழ்ப்பெண்களின் திமிர்

இப்படி...

இந்தமுறை
கூட பயணித்தவரின்
கதைகள் முடிவற்ற கிளைகளாக விரிய
நான் திணறினேன்
முடியும் திசையின் தொலைவு தெரியாது

வயதானவர் என்றபோதும்
விருந்தாளியாக வந்தவர்
பக்கத்து வீட்டுக்காரரின்
கதை அளந்தபோது
இப்படிப் பேசுவதென்றால்
இங்கே வரவேண்டாமென
முகத்திற்கு நேரே
முன்னெப்போதோ சொன்னது
நினைவினில் எழுந்தது

எனினும்
எதற்கும் உடனே
எதிர்வினை செய்யும்
பொறுமையற்றவன்
எனும்
அப்பாவின் முணுமுணுப்புக்களை
இந்தமுறையாவது
பொய்யாக்கும் முனைப்புடன்
நான்
செவிகளாக மட்டுமே ஆயினேன்

என் மெளனம்
பயணித்தவருக்கு
உற்சாகம் தந்திருக்கக்கூடும்
தான் கொடுத்த
பெரும் கடனையும்
மீளப்பெற முடியாத
இயலாமையையும்
இனி ஒரு வாழ்வு
இயல்பாய் அமைதல் கடினமெனவும்
துயரத்தை விரித்தார்
பெரும் நாவலைப்போல

'கடன் வாங்கியவன்
மூன்றாவதும் பெத்துப்போட்டு
இலங்கைக்கும்
சுற்றப்போய்விட்டான்
நான்
காசில்லாது உழலும் பிச்சைகாரன்
ஒரு டொலர் கோப்பிகுடிக்கக்கூட
எத்தனை முறை யோசிக்கவேண்டும்
எங்கிருந்தாலும்
அவன் உருப்பப்படமாட்டான்'
கவலை சாபமாய் விகசித்தது
இளைப்பாற நின்ற
ஓர் கோப்பிக்கடையில்

நாமெல்லாம பலவீனர்கள்தான்
எப்போதாவது சறுக்கிவிழுபவர்கள்தான்
என்று சமாளித்தபடி
ஏதோவெல்லாம் சொல்லி
பயணியின் சோகம் கரைக்க முயன்றேன்
செல்லவேண்டிய நிகழ்விற்கு
ஒரு மணித்தியாலயம் தாமதாய்
வந்ததைக்கூட
அசட்டை செய்யாது

விடைபெறும்போது,
'தம்பி
படிப்பு முடிந்து
இந்த நகரிற்கு
இடம்பெயர்வதாய் இருந்தால் சொல்லும்
என்ரை மூன்றாவது வீடு
இங்கை சும்மாதான் கிடக்கு
வாடகைக்கு வந்து குடியமரலாம்'

என்னைப் பார்த்துச் சிரித்தது
எனது சுயம்.


இளங்கோ
2003.06.09

This page is powered by Blogger. Isn't yours?